விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் நகரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ளது அம்மனம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 1,000 மக்கள் வசித்துவருகிறார்கள். மாணவ -மாணவிகள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார்கள். ஐந்து கிலோமீட்டர் தூரத்தையும் நடந்து சென்றுதான் படித்து வந்துள்ளனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்- அங்கம்மாள் தம்பதியின் மகள் தர்ஷினி. எட்டாம் வகுப்பு மாணவியான இவர், சில தினங்களுக்கு முன்பு அனந்தமங்கலம் பள்ளியில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இளம் பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்ச்சியும் பெற்றுள்ளார். அனந்தமங்கலத்தில் போட்டி யில் கலந்துகொண்டு வீட்டுக்கு வருவதற்கு வெகுநேரம் ஆகிவிட்டது. அப்பகுதி மக்கள் பஸ் போக்குவரத்து வசதியில்லாமல் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் யோசித்த மாணவி தர்ஷினி, பாடல் நிகழ்ச்சியின்போது, “தனது ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்திற்கு என்னைப் போன்ற பல பிள்ளைகள் பள்ளிக்கு நடந்துசென்று படித்துவருகிறோம். இரண்டு ஊர்களை இணைக் கும் வகையில் பஸ் வசதி செய்துதருமாறு ஊர் முக்கியஸ்தர்கள், அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்ற ஆதங்கத்தை ஜீ தொலைக்காட்சிமூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு செல்ல, அவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்க ரைத் தொடர்புகொண்டு மாணவியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளிடம் புதிய வழித் தடத்தை ஏற்படுத்தி மாணவியின் கோரிக்கை யை உடனடியாக நிறைவேற்றியதோடு, அந்த நிகழ்ச்சிக்கு மாணவி தர்ஷினி உட்பட அந்த ஊர் பள்ளிப் பிள்ளைகள் அனைவரையும் வரவழைத்து, மாணவி தர்ஷினி கைகளால் கொடியசைக்க வைத்து பஸ் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தார். தர்ஷினியையும் மாணவிகளையும் பஸ்ஸில் ஏற்றி அமரவைத்து அமைச்சரும் பயணம் செய்தார்.
அரசுப் பள்ளி மாணவியின் கோரிக்கை யை ஏற்று உடனடியாக பஸ் ஏற்பாடு செய்த அமைச்சருக்கு மாணவ -மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
-எஸ்.பி.எஸ்.